சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

6.9.12

என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம்..?!

காலம் காலமாக பகுத்தறிவு இல்லாமல் வாழும் மக்களுக்காக பயங்கர அறிவுடன் எழுதும் என்னைப் போன்ற இணைய எழுத்தாளர்களை எப்படி மதிக்க வேண்டும், எப்படி கொண்டாட வேண்டும் என்று கூட இந்த மக்களுக்கு தெரிய வில்லையே..?! இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல..?! இதையே நான் ஆப்கானிஸ்தானில்  ஆரம்பித்து ஜிம்பாப்வே வரை உள்ள 196 வெளிநாடுகளில் (அவ்ளோ நாடுகள்தான் இருக்காம்.நெட்ல பாத்துட்டேன்) எழுதியிருந்தால் கிடைக்கும் மரியாதை அளப்பற்கரியது. 

கோடிக்கணக்கான பேர் படிக்கும்,தமிழர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும், என்றும் இளமையான, இளைஞர்களுக்கும்,பெரியவர்களுக்கும் பிடித்த ஆயிரம் வார இதழ்கள் வந்தாலும் மக்கள் மனதில் என்றும் நெ.1 வார இதழான ஆனந்த விகடனுக்கு(அப்பா..செமையா பாராட்டியாச்சு...இன்னும் ஒரு வாரத்துக்கு என் பகுதியை தூக்க மாட்டாங்க) தெரிந்தது இந்த மக்களுக்கு தெரியவில்லையே... என் செய்வேன்..?!

இந்நேரம் ஒரு ஆயிரம் பேராவது நேரிலோ,போனிலோ,மின்னஞ்சல் வழியாகவோ வாழ்த்தியிருக்க வேண்டாமா..?! நூறு பேராவது நேரில் வந்து சால்வை போர்த்தியிருக்க வேண்டாமா..?! அல்லது பார்சலாவது அனுப்பியிருக்க வேண்டாமா..?! குறைந்தது 10 பாராட்டு கூட்டங்களுக்காவது அழைப்பு வந்திருக்க வேண்டாமா..?! பொற்கழுகு (ஹி..ஹி...பொற்கிழி(ளி) சின்னதா இருக்கும்)  பரிசளித்திருக்க வேண்டாமா..?!

ஒருவன் தன் புகழை தானாகவே எவ்வளவு நாளைக்குதான் கூவிக் கொண்டிருப்பது..?! "தானே கூவிய தானைத்தலைவன்" என்ற பட்டம் வரலாற்றில் இடம் பிடித்து விட்டால் என் செய்வது..?!என்னமோ பொங்கல்..ச்சீ... போங்கள்.

இவ்வளவு கூவிய பிறகும் எதற்கு கூவுகிறான் என்று கேட்டு வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டாம். (சொன்னாதாண்டா தெரியும்.மேட்டருக்கு வா...) இந்த வார விகடன் இணையத்தளத்தில் என் விகடன் பகுதியில் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவனான என்னையும் மதித்து வலையோசை பகுதியில் கௌரவித்துள்ளார்கள். இப்பவாவது போய்ப் பாத்துட்டு ஒரு அற்புத எழுத்தாளர் வெளிநாட்டுக்கு போய்டாம ஏதாவது ஒண்ணு  உடனடியா செய்ங்க....அப்புறம் உங்களுக்குதான் நஷ்டம்.  :)

Post Comment

5.9.12

இதுவும் கடந்து போகும்...



நம்ம அரசு இயந்திரத்தோட தாரக மந்திரம் இதுதான்...துயரம் ஏற்படுவதை தடுக்காமல் அது நடந்த பிறகு அரசு நடந்து கொள்வது இந்த வார்த்தையின் அடிப்படையில்தான்....

இன்னும் ஒரு வாரத்துக்கு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் முழுவதையும் கடமையே கண்ணாக சோதனை செய்வார்கள். அடுத்த மாதமே பழைய கதைதான்...சென்ற மாதங்களில் நடந்த குழந்தைகள் விபத்துகளின்  சோதனைகள் போன்றுதான் இதுவும் இருக்கும். பரபரப்பு பசியோடு திரியும் ஊடகங்கள் மீண்டும் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க அரசு என்னென்ன தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்து மக்களுக்கு தெரியப்படுத்தலாம். ம்ஹீம்...அதெல்லாம் நம் நாட்டில் நடக்கவே நடக்காது.

நமது குழந்தைகளின் ஆசைக்காக பட்டாசு வெடித்து நாம் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்காக வருடம் தோறும் சிவகாசியில் சில குடும்பங்கள் உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது. சட்டங்களை மதிக்காமல் அதில் உள்ள ஓட்டைகளை மட்டும் தெரிந்து வைத்திருக்கும் சில பட்டாசு தொழிற்சாலை முத(லை)லாளிகளுக்கும் ,அவர்கள் கொடுக்கும் லஞ்சப்பணத்தை வாங்கிக்கொண்டு இது போன்ற பாதுகாப்பற்ற ஆலைகளை நடத்த அனுமதி தரும் அதிகாரிகளும் இருக்கும் வரை இந்த துயரம் வாடிக்கையாகத்தான் இருக்கும். அமீரக நாடுகளைப்போல் இங்கும் சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும். இவர்கள் தரும் நிவாரணப் பணம் போன உயிர்களை திருப்பித்தருமா..?! என்னமோ போங்க...  :(

Post Comment